Feb 4, 2016

ஜிகா வைரஸ்

உலக நாடுகளைத் திகிலடைய வைத்திருக்கிற ஜிகா வைரஸ் மருத்துவத் துறைக்குப் பெரும் சவால் மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு நாளொரு மருந்தும் பொழுதொரு கருவியும் நடைமுறைக்கு வருகிறது என்றாலும், மருத்துவத் துறைக்குச் சவால் விடுவதைப் போல, அவ்வப்போது புதிய நோய்கள் ஏற்படுவதையும் உலக அளவில் தடுக்க முடியவில்லை. 


         கடந்த ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவும் மெர்ஸ் நோயும் பரவி, உலக நாடுகளை ரொம்பவே அச்சுறுத்தியது. இந்த ஆண்டில் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் பரவி வரும் ‘ஜிகா’ எனும் புதிய வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பரவிவிடுமோ என்கிற அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது. காட்டில் பிறந்த வைரஸ் டெங்கு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஜிகா வைரஸ். இது ஏற்படுத்துகிற நோய்க்கு ஜிகா வைரஸ் நோய் (Zika virus disease) என்று பெயர். முதன்முதலில் உகாண்டா நாட்டில் ஜிகா காடுகளில் வாழ்ந்த ‘ரீசஸ் மக்காக்’ (Rhesus macaque) எனும் குரங்குகளிடம் இந்த நோய் காணப்பட்டதை 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சி நிறுவன’த்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது அவர்களுக்கு இந்த நோய்க்கான காரணம் தெரியவில்லை. 1952-ம் ஆண்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளின் ரத்த மாதிரியிலிருந்து ஜிகா வைரஸைப் பிரித்தெடுத்து, நோய்க்கான காரணத்தை உறுதி செய்தனர். ஜிகா காடுகளில் இந்த வைரஸ்கள் காணப்பட்டதால், இவற்றுக்கு ‘ஜிகா வைரஸ்’ என்று பெயரிட்டனர். ஆரம்பத்தில் இது ஒரு விலங்கின நோய் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், இது குரங்குகளிடமிருந்து மனிதர் களுக்கும் பரவக்கூடியது என்பதை 1968-ல் நைஜீரியாவில் வாழ்ந்த ஒரு நோயாளியிடம் கண்டுபிடித்தனர். 1951-க்கும் 1981-க்கும் இடைப்பட்ட காலத்தில் உகாண்டா, கேபான், சியாரா லியோன், மத்திய ஆப்பிரிக்கா, தான் சானியா, காங்கோ உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது இந்த நோய் பரவுவதும், இடையிடையே பதுங்குவதுமாக இருந்தது. சமீபத்தில் இது ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் பிரேசில் உள்ளிட்ட பல பகுதிகளில் இது வேகமாகப் பரவிவருவதால், ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகிவிட்டது. டெங்கு, சிக்குன்குனியா கிருமிகளைப் பரப்புகிற ‘ஏடஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள்தான் ஜியா கிருமிகளையும் மக்களுக்குப் பரப்பிவருகின்றன. இந்தக் கொசுக்கள் கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடுவது வழக்கம். இது தவிர, கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்கும் பரவுகிறது. இந்தக் கிருமி உள்ளவர்கள் ரத்ததானம் செய்தால் அதன் மூலமும் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப் புள்ளது. தாம்பத்திய உறவு மூலமும் இது பரவக்கூடியது. அறிகுறிகள் என்ன? ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் மிதமான காய்ச்சல் வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். தலைவலி தொல்லை தரும். கண்களில் எரிச்சல் ஏற்படும். ஒவ்வாமை ஏற்படும்போது சொறிந்தால் தோல் சிவப்பதைப் போல உடலெங்கும் சிவப்பு நிறத் தடிப்புகள் உண்டாகும். கண்கள் இரண்டும் ஆப்பிள் பழம்போல் சிவந்துவிடும். இதுதான் இந்த நோயை இனங்காட்டும் முக்கிய அறிகுறி. இதுவரை சொன்ன அறிகுறிகளில் கண்கள் சிவப்பது தவிர, மற்றவை எல்லாமே சாதாரண வைரஸ் காய்ச்சலிலும் தோன்றும் என்பதால் பலரும் இந்த நோயை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். ஆபத்து எப்போது? இந்த நோய் ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மூளை பாதிக்கப்படுகிறது. ‘கில்லன் பாரி நோய்’ (Guillain - Barre Syndrome) என்று அழைக்கப்படுகிற நரம்புவாதம் ஏற்பட்டு, உடல் முழுவதும் செயலிழந்து முடமாகிவிடுகின்றனர். சமயங்களில் இது இறப்புக் கும் வழிவகுக்கும். இது கர்ப்பிணிகளைத் தாக்கி னால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பல குறைபாடுகளுடன் பிறக்கின்றன. அவற்றில் முக்கிய மானது சிறிய தலையுடன் (Microcephaly) பிறக்கிற குழந்தைகள். இவர்களுக்கு மூளை வளர்ச்சி தடுக்கப்படுகிறது; மத்திய நரம்பு மண்டலம் வேலை செய்வதில்லை; இந்தக் குழந்தைகள் அறிவு வளர்ச்சி இல்லாமலேயே வாழ வேண்டிய நிலைமைதான் இந்த நோயின் உச்சகட்டக் கொடூரம். என்ன பரிசோதனை? என்ன சிகிச்சை? டெங்கு காய்ச்சலைக் கண்டறிய உதவுகிற ஐ.ஜி.எம். (IgM), ஐ.ஜி.ஜி. (IgG), எலிசா (Elisa), பிசிஆர் (PCR) ஆகிய நவீன ரத்தப் பரிசோதனைகளில் ஜிகா பாதிப்பு இருப்பது தெரிய வரும். எனவே, இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இதற்குச் சிகிச்சை தர மருந்துகளோ, வருமுன் காப்பதற்குத் தடுப்பு ஊசிகளோ, தடுப்பு மருந்துகளோ இப்போதைக்கு இல்லை என்பதுதான் சோகம். உலக நிலவரம் இப்போது அமெரிக்கக் கண்டத்தில் மட்டும் 23 நாடுகளில் சுமார் 40 லட்சம் பேருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்க் குழு வல்லுநர் மார்கஸ் எஸ்பினால் தெரிவித்துள்ளார். ‘‘பிரேசிலில் மட்டும் இந்த ஆண்டில் 3,893 குழந்தைகள் சிறிய தலையுடன் பிறந்துள்ளனர். கடந்த 5 வருடங்களில் இந்த எண்ணிக்கை 30 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இது மருத்துவத் துறைக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கிற புள்ளிவிவரம்’’ என்கிறார் அவர். இந்தியாவில் என்ன நிலவரம்? தென்அமெரிக்க நாடுகளில் இருந்து தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளதை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இந்த நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செல்பவர்கள் அதிகம். அதுபோல் அங்கிருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களும் அதிகம். அப்போது அவர்கள் ரத்தத்தில் ஜிகா வைரஸைச் சுமந்து வரக்கூடும். இந்த நோயைப் பரப்புகிற ‘ஏடஸ் எஜிப்தி’ கொசுக்கள் இந்தியாவில் நீக்கமற நிறைந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் இந்தக் கொசுக்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். இவை டெங்குவைப் பரப்புகிற வேகத்தில் ஜிகாவையும் பரப்பினால் பெரிய ஆபத்து நேரும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை இந்தி யாவில் ஜிகா பாதிப்பு குறித்து கண்காணிக்க மருத்துவக் குழுவை நியமித்துள்ளது. இந்த நோய்க் கான பரிசோதனை வசதிகளை பூனாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைக்கு வெளிநாட்டுப் பயனாளிகள், குறிப்பாக கர்ப்பிணிகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. கொசுக்களை ஒழிப்பதுதான் இந்த நோயைத் தடுக்கும் ஒரே வழி என்பதால், சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய ஏடஸ் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துவருகிறது. உலக நாடுகளைத் திகிலடைய வைத்திருக்கும் ஜிகா வைரஸின் கோர முகத்தைத் தெரிந்துகொண்டு, அதன் பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசும் தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Share

& Comment

 

Copyright © 2015 learnerkey

Designed by Templateism. Hosted on Blogger Platform.